ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்கலங்களை செலுத்துவதில் பல புதிய முறைகளை கையாண்டு வருகிறது. புதுமையையும் மேம்படுத்துவதையும் துரித கதியில் செய்வது; அடிக்கடி சோதனைகளை நடத்துவது; தொழில் நுணுக்கங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கிக் கொண்டுபோவது; வெடித்துச் சிதறுவது, கீழே விழுந்து நொறுங்குவது இவற்றிலிருந்து கற்றுக் கொள்வது; மேலும் புதிய முறைகளை செய்வது; இவை எல்லாம் அடங்கியதே அதன் செயல்பாடுகள். அதன் ஃபால்க்கன் தொடர் ஏவுதலும் விண்கலன்களை மறு பயன்பாடு செய்யும் சோதனைகளும் இந்த தடத்திலேயே பயணித்தன.
விண்கலங்களை மறு பயன்பாடு செய்யும் அதன் புதிய கண்டுபிடிப்பு
விண்வெளித்துறையையே புரட்டிப்போடும் ஒன்றாகும். ஆனால் அதன் ஃபால்க்கன் தொடர் சோத னையில், பூஸ்ட்டர் எனப்படும் முதல்பகுதியை மட்டுமே அதுவும் பல வாரங்கள் சீரமைத்த பின்னரே பயன்படுத்த முடிந்தது. விண்ணில் பயணம் செய்யும் இரண்டாவது பகுதி கைவிடப்பட்டது. இப்போது அது தொடங்கியுள்ள ஸ்டார்ஷிப் எனும் சோதனைகளில் இரண்டு பகுதிகளை யுமே மறு பயன்பாடு செய்ய முடியுமா என்று முயற்சிக்கப்படுகிறது. முதல் சோதனையில் பூஸ்ட்டர், நடுவானில் வெடித்து சிதறியதோடு, இரண்டாவது பகுதி அதிலிருந்து பிரியவும் செய்ய வில்லை. அதுமட்டுமில்லாமல் விண்கலம் ஏவப்படும்போது அதன் அதிர்ச்சியினால் ஏவுதளத்தின் கான்கிரீட் தரையில் பெரிய பள்ளம் ஏற் பட்டது. அதிலிருந்து கற்கள், மணல், தூசி ஆகியவை அருகிலிருந்த நகரில் மழைபோல் கொட்டியது. இதற்காக தேசிய விண்வெளி நிர்வாகத்தின் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அமெரிக்க பழங்குடி மக்களும் வழக்கு தொடுத்தனர்.
நிர்வாகமும் அடுத்த சோத னைக்கு முன்னால் 63 திருத்த நடவடிக்கை களை ஸ்பேஸ் எக்ஸ் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அவற்றை செய்தது. அதில் முக்கியமான இரண்டு விசயங்களை பார்க்கலாம். ஒன்று ஏவுதளம் வெடிக்காமல் இருப்பதற்காக அதனடியிலிருந்து நீரை பீச்சி அடிக்கும் ‘டெலூஜ் முறை’. விண்கலம் ஏவும் போது ஏற்படும் அதிக வெப்பம் 3,60,000 கேலன் நீர் மூலம் உள்வாங்கப்பட்டது. இதனால் ஏவுதளத்திலிருந்து கற்கள் வெடித்துச் சிதறவில்லை என்பதை அங்கு சென்று பார்த்த பத்திரிகையாளர்களும் மற்ற வர்களும் உறுதி செய்தனர்.
இரண்டாவது விசயம் பூஸ்ட்டரி லிருந்து விண்கலம் பிரிவதை உறுதி செய்வது. இதற்காக ‘ஹாட் ஸ்டேஜிங்’ எனும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பூஸ்ட்டர்களின் 33 எஞ்சின்கள் இயங்கிக்கொண்டிருக்கும்போதே பிரிய வேண்டிய விண்கலத்தின் எஞ்சின் களும் இயக்கப்பட்டு, ராட்சச ஆற்றல் மூலம் பிரிகிறது. இது புதுமையானது அல்ல. நாசாவின் ஜெமினி தொடரி லும் ரஷ்யாவின் சோயுஸ் தொடரிலும் பயன்படுத்தப்பட்டதுதான்.
ஸ்பேஸ் எக்ஸின் முரட்டுத்தன மான சோதனைகளுக்கு மாறாக, நாசாவின் நிதானமான, கவனமான, படிப்படியான, வடிவமைப்பில் முழு செம்மை, சோதனை என்கிற வியூகம் உள்ளது. இருந்த போதிலும் ஸ்பேஸ் எக்ஸிற்கு நாசா 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளது. இதேபோல் விண்வெளி நிலை யத்திற்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்காக போயிங் நிறுவனத்திற் கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒருமுறைகூட தன்னுடய விண்கலத்தை ஏவவில்லை. ஸ்பேஸ் எக்ஸ் எட்டு முறை வீரர்களை விண் வெளி நிலயத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸில் தொழிலாளிகளின் நிலமை
ஸ்பேஸ் எக்ஸின் இப்படிப்பட்ட அற்புதமான, அதே சமயம் ஆபத்தான மற்றும் மண்டைக்கனம் எனும்படியான புதுமையான வழிமுறைகளுக்கு அப்பால் இன்னொரு இருண்ட பகுதி உள்ளது. தொழிலாளிகளின் பாதுகாப்பை அமைப்பு ரீதியாக வும் வேண்டுமென்றேயும் அலட்சி யப்படுத்தும் போக்கினூடேயே இந்த சாதனைகள் நடந்துள்ளன. அரசு நிறுவனங்களான நாசா, எஃப் ஏஏ, ஒஷா (FAA, OSHA) (பணியிடப் பாது காப்பு மற்றும் உடல்நல நிர்வாகம்) இவற்றின் மேற்பார்வை யில் மெத்தனப்போக்கும் இதற்கு துணை போகிறது.
கடந்த மாதம் ராய்ட்டர் நிறுவனம் நடத்திய ஆழமான, நேரடி ஆய்வு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் காணப் படும் பயங்கர நிலமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் விதிமுறைகளும் இல்லாமல் பணி புரிவதால் தொழிலாளிகள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவற்றோடு சேர்ந்து மேற்பார்வை யாளர்களின் அலட்சியமான பொறுப்பற்ற போக்கினாலும் தொழி லாளிகளுக்கு ஏற்படும் கொடுமை யான காயங்களை அது ஆவணப் படுத்தியுள்ளது. விபத்துகளுக்கு சிறிதளவோ அல்லது எந்தவிதமான நஷ்ட ஈடும் கொடுப்பதில்லை.
பிணைக்கப்படாத கனமான பொருட்கள் தொழிலாளிகளின் மீது விழுதல், தொழிலாளிகளை வாகன த்தின் மீது பெரிய இயந்திர பாகங்களை பிடித்துக் கொண்டு இருக்க சொல்வ தால் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களிலிருந்து விழுதல், எந்தவிதமான பாதுகாப்பு முறைகளும் எச்சரிக்கையும் இல்லாமல் இயந்திரங்களை ஸ்டார்ட் செய்வதால் பலத்த காயம் ஏற்படுதல் போன்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
நெறிப்படுத்தும் அரசு நிறு வனங்களும் சரி, இதுவரை ஸ்பேஸ் எக்ஸிற்கு 11 பில்லியன் டாலர்களை அளித்துள்ள பிரதான ஒப்பந்த தாரரான நாசாவும் சரி எந்தவித மான மேற்பார்வையும் செய்யாத தோடு ஸ்பேஸ் எக்ஸின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய விசயம். விண்கலங்களை செலுத்துவதிலிருந்து நாசா தன்னை விடுவித்துக் கொண்டு தனியாருக்கு தந்ததன் அவலம்தான் இது. மேற்பார்வை பார்க்கும் அரசு நிறுவனங்களும் தங்கள் பணிகளை நீர்த்துப் போக செய்ததினால் தொழி லாளிகள் பெரும் விலையை கொடுக்க வேண்டியுள்ளது. அரசு மேற்பார்வை நிறுவனங்களுக்கு தொழிலாளிகள் பல முறை புகார் அளித்தபின் ஸ்பேஸ் எக்ஸ் ‘‘தங்கள் பாதுகாப்பை தொழி லாளிகளே பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதை உறுதி செய்வதை அந்தப்பணி ஒப்படைக்கப் பட்டுள்ள பொறுப்பான அதிகாரிகள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று பதிலளித்தது.
இந்த நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களை ராய்ட்டர் நிறுவனம் பேட்டி கண்ட போது, பியுராக்கிரடிக் என்கிற ‘அதிகாரி கள் நிறுவன அமைப்பின்’ மீது எலான் மஸ்க் கொண்ட சொந்த வெறுப்பே இந்த நிலமைகளுக்கு காரணம் என்றனர். இந்தப் போக்கு எலான் மஸ்க்கின் தாராள வாதம் மற்றும் நெறிப்படுத்த லுக்கு எதிரான பார்வை ஆகிய வற்றோடு சரியாக பொருந்துகிறது.
உலகம் விரைவில் தன்னைத் தானே அழித்துக் கொண்டுவிடும்; ஆகவே அதிலிருந்து தப்பித்து மக்க ளை செவ்வாய் போன்ற கோள்களில் குடியேற்ற வேண்டும்; என்கிற எலான் மஸ்க்கின் இறைத்தூதுவர் போன்ற விழைவு அந்த நிறுவனத்தில் ஒரு தெய்வீக நம்பிக்கை போல பின்பற்றப் படுகிறது. உலகுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டப்படுகிறது போன்ற வலதுசாரி கருதுகோள்களுடன் எலான் மஸ்க் இணைந்து கொள்கிறார்; ஆத ரிக்கிறார். அண்மையில் யூதர்களுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவை எல்லாம் ஒரு பயங்கரமான போக்கை காட்டுகிறது.
எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் இந்த இன்னொரு முகத்தை அலட்சியப்படுத்த முடியாது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி நவம்பர் 20-26 தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ள தோழர் ரகு அவர்களின் கட்டுரையிலிருந்து)